Search This Blog

Sunday, June 19, 2016

என் ஆச்சிய பாக்கணும், ரசிக்கணும் :( :)

இன்னைக்கு ராஜ் டிவில 'பார்த்தேன்  ரசித்தேன்' படம் போட்ருந்தான். எப்போவுமே அப்படியே 10-15 வருஷம் பின்னாடி கூட்டிட்டு போற படம் அது எனக்கு. என் திருநெல்வேலி ஆச்சியை ஞாபகபடுத்துற படம். திருநெல்வேலி ஆச்சி என் அம்மா பாட்டி. அந்த ரொமாண்டிக் மூவிக்கும் என் பாட்டிக்கும் அப்படி என்ன கனக்க்ஷன் இருந்துட முடியும் ?!  எதுவும் இல்ல தான். இது எனக்கும் என் ஆச்சிக்குமான கனக்க்ஷன்.

சின்ன வயசுல எங்க அப்பா குடும்பத்துல ஒரு பழக்கம் இருந்துச்சு. எல்லா ஸ்கூல் வக்கேஷனுக்கும் ரெண்டு மாசம் லீவு கெடைக்கும். அப்பா வீட்டு கசின்ஸ் ஓட ஒரு டீல் இருக்கும். சின்ன வயசுல எல்லா அவங்க கசின்ஸ்-ஆ இல்ல. தம்பி தங்கச்சிய தான் இருந்தாங்க. எங்க டீல் என்னானா, முதல் ஏப்ரல் மாசம் எல்லாரும் அவங்கவங்க அம்மா தாத்தா வீட்டுக்கு போய் தங்கிக்கலாம். ரெண்டாவது மே மாசம் எல்லாரும் எங்க அப்பா தாத்தா வீட்டுக்கு வந்துடனும். என் அத்தை பசங்களையும் தாத்தா வீட்டுக்கு அனுப்ப சொல்லி மாத்தி மாத்தி ஒவ்வொருத்தரா அத்தை கிட்ட கெஞ்சுவோம் . "நான், செல்வி, கார்த்தி, மகேஷ் எல்லாம் ஆளூருக்கு வந்துட்டோம் அத்தை. பவி, வெங்கடேஷ்- ஆ அனுப்பி வைங்க" நு. ஆளூர் தான் என் அப்பா தாத்தா ஊரு. அழகான குட்டி கிராமம்.

சரி இப்போ ஏப்ரல் மாசம் தான் ஆகி இருக்கு. என் ஆச்சி வீட்டுக்கு போலாம் வாங்க :)

எப்போவுமே அம்மா தான் என்னையும், தம்பியையும் பஸ் ல திருநெல்வேலிக்கு கூட்டிட்டு போவாங்க. என் தம்பி கார்த்தி சரியான அம்மா அப்பா புள்ள. நான் மட்டும் மாமா அத்தை ஆச்சி எல்லாரோடவும் நல்லா ஒட்டிப்பேன். அம்மா ரெண்டு நாள் ஆச்சி வீட்ல தங்கிட்டு கார்த்திய கூட்டிட்டு கெளம்பிடுவாங்க என்ன மரியாதையா ஒழுங்கா நடந்துக்க சொல்லிட்டு. அப்புறம் தான் என் ராஜ்ஜியம் ஆரம்பிக்கும் ஆச்சி வீட்டுல.

"ஆச்சி என்னைக்கு என்ன சினிமாக்கு கூட்டிட்டு போவ?? " - இது ஆல்வேஸ் நான்.
"மாமா வரட்டும் டி, கேப்போம் " - இது ஆல்வேஸ் ஆச்சி.

என் ஆச்சிக்கு சினிமா பாக்க ரொம்ப புடிக்கும் னு என் அம்மா சொல்லி கேட்டிருக்கேன். அம்மா சின்ன பொண்ணா இருந்தப்போ,  தாத்தா லேட்டா வருவாங்க னு தெரிஞ்சா, அம்மாவையும், குட்டி மாமாவையும், ரெண்டு சித்திங்களையும் பக்கத்துக்கு வீட்டு அக்கா கிட்ட ஒப்படைச்சிட்டு, தெருவுல இருந்த மத்த ஆண்டீஸ் ஓட சேர்ந்து நைட் ஷோ பாக்க போவாளாம் என் ஆச்சி. தாத்தா இறந்த அப்புறம் ஆச்சி சினிமாக்கு போறதில்ல னு அம்மா சொல்லி இருக்காங்க.

அடுத்த வாரத்துல இருந்து "கூட்டிட்டு போவியா மாட்டியா" னு படுத்துவேன். அதுக்கடுத்த வாரம் "கூட்டிட்டு போறியா இல்லையா" னு ஆரம்பிப்பேன். அதுக்கடுத்து "கூட்டிட்டு போகலைனா என் வீட்டுக்கு போயிருவேன்"னு மெரட்டுவென்.
அப்படி ஒரு மூணாவது வாரம், குட்டி மாமா வீட்டுக்கு மத்தியானம் சாப்பிட  வரும்போது ஆச்சி ஆரம்பிச்சா "லேய் மணிகண்டா, இந்த பிள்ளைய ராயல் தேட்டருக்கு கூட்டிட்டு போனும் ல, கேட்டுட்டே இருக்கா". குட்டி மாமா பதில் ஏதும் சொல்லாம சாப்புட்டே முடிச்சுட்டாங்க. கை கழுவிட்டு கெளம்பும்போது, ஆச்சிகிட்ட சிரிச்சுட்டே காசு குடுத்துட்டு சொன்னாங்க "தேட்டர்ல எதாச்சும் திங்கிறதுக்கு வாங்கி குடும்மா பிள்ளைக்கு ". மாமா க்கு தெரியும்  ஆச்சிக்கு சினிமா புடிக்கும் னு.

ஒரு வழியா நானும் ஆச்சியும் சாயங்காலம் சினிமா தியேட்டருக்கு கெளம்புனோம். ஒரு ஒயர் கூடைல ஒரு பாட்டில் தண்ணி நெரப்பி வச்சுகிட்டா. போற வழியில விநாயக பேக்கரி ல 200 கிராம் சீவல் வாங்கி வச்சுகிட்டா. நான் கூடையா வாங்கி கைல தூக்கிட்டு வந்தேன். ஆச்சிக்கு தெரியும் அந்த கூடை முழுசா என் சந்தோஷம் நெறஞ்சு இருக்குனு. அப்படியே நடந்து தியேட்டர் வரை நெல்லையப்பர் கோவில் வழியா கதை  பேசிட்டே போனோம்.
ராயல் தியேட்டர் ல டிக்கெட் வாங்கிட்டு ஒரு க்யுல போனோம். வழியில கான்டீன் கிராஸ்  ஆகும்போது ஆச்சிய்ய நிமிந்து பாத்தேன். "அதான் சீவல் இருக்குல்லடி" ன்னா. நான் குனிஞ்சிகிட்டேன். உடனே ரெண்டு கை முறுக்கு, ரெண்டு கடலை மிட்டாய் வாங்கி வச்சிகிட்டா கூடைல. அப்படி ஒரு பல்பு எரிஞ்சுது என்  மூஞ்சில.

போய் சீட்ல உக்காந்து படமும் ஆரம்பிச்சது. பாட்டி சீவல் பாக்கட்டா எடுத்து கைல குடுத்துட்டு தண்ணி வேணா எடுத்து குடிச்சுக்கோ னு சொன்னா. பார்த்தேன் ரசித்தேன் ல வர்ற காதல், ரொமான்ஸ், சண்ட, கோபம், பிரஷாந்த், லைலா, சிம்ரன் எதுமே புரியாத வயசு எனக்கு. அப்பப்போ ஆச்சி in between சொல்றத மட்டும் கேட்டுட்டே சீவல்ல புல்   போகஸ்  காட்டிட்டு இருந்தேன். லைலாவுக்கு இதான் முதல் படம், நல்லா கலரா இருக்கா னு ஆச்சி சொன்னப்போ she became my favorite  heroine then  :)

படம் பாக்கறத விட சீவல் கை முறுக்கு கடலை மிட்டாய் யாருக்கும் தராம நாமளே சாப்டற சந்தோஷம் அலாதியானது எனக்கு. இண்டர்வல் குள்ள சீவல் மற்றும் அரை பாட்டில் தண்ணிய காலி பண்ணிட்டேன். மிச்சம் இருந்த கை முறுக்கும் கடலை மிட்டாயும் மிச்ச படம் பாக்கும்போது காலி பண்ணுனேன்.

படம் முடிஞ்சு நானும் ஆச்சியும் அப்படியே நெல்லையப்பர் பிரகார வீதியில வளையல், கழுத்துள்ள போடற பாசி, செப்பு சாமான் எல்லா வாங்கிட்டு வந்து சேந்தோம் அன்னைக்கு.

காலேஜ் செகண்ட் இயர் படிக்கும்போது என் ஆச்சி தவறிட்டா. அதுவரை பார்த்தேன் ரசித்தேன் - ல பாட்டு நல்லா இருக்கும், 'எனக்கென ஏற்கனவே' female version ல ஹரிணி வாய்ஸ் நல்லா இருக்கும், சிம்ரன் நல்லா actress அப்டிங்கறது எல்லாம் தான் தோணும். அதுக்கப்பறம் ஒவ்வொரு வாட்டியும் 'எனக்கென ஏற்கனவே' கேட்டாலோ, அந்த படத்துல எதாச்சும் சீன் பாத்தாலோ , கூட பக்கத்துல இருக்கறவங்ககிட்ட நான் சொல்ற ஒரே விஷயம் "பார்த்தேன் ரசித்தேன் என் திருநெல்வேலி ஆச்சி கூட பாத்தா படம்" ங்கறது தான்.

இந்த memory என்னைக்குமே அழிஞ்சுற கூடாதுங்கற ஒரே காரணத்துக்காக இத பதிவு செஞ்சு வைக்கறேன். When I grow old, i always want to cherish this memory of my ஆச்சி who was extra ordinarily fond of me.

Monday, August 20, 2012

முதல் சந்திப்பு !!


உனக்கும் எனக்குமான - நம்
காதல் பிறந்த வேளையில் - ஒரு
உலகம் காணாமல் போனது நம்மோடு !!
நட்பிளகி, கசிந்துருகி காதலான பின்னரான
முதல் சந்திப்பில்
முகம் பார்க்காமல்
சேர்ந்து நடக்க ஆரம்பித்து
உளறல் பேச்சோடும்
வெட்கம் சிறிதோடும்
கொஞ்சம் படபடப்பில்
வானம் நட்சத்திரம் ஆராய்ந்து
சாலை தூரம் அளந்து
அனிச்சையாய் தலைகுனிந்து
கைகோர்க்கும் இச்சை அடக்கி
கடிகார நேரம் கரைத்து
கரையும் நேரத்தை கடிந்து
உள்ளூர நான் தவித்துக் கொண்டிருக்கையில்
விரல்கள் உரசும் ஸ்பரிசம் உணர்ந்து
உன்னை நோக்கி என் முகம் திருப்பி
கள்ள சிரிப்போடு
"என்னையும் கொஞ்சம் பாரு" என்றபோது
என்னை முழுதாய் கொட்டி வைக்க
தோதாய் அமைந்தவன் நீ ஆனாய் !!

Monday, February 13, 2012

மயக்கம் என்ன?!?!யாருமற்ற நடுமுற்றத்தில்
அவசரமாய் நானறியாமல்
கன்னத்தில் நீ பதிக்கும் கள்ளத்தனங்களால்
வெட்கச்சிதறல் தனை மறைக்க
விரல் நகம் உடைக்க முற்படுகிறேன் நான் !!
சட்டென திரும்பி ஒன்றுமறியா வாக்கில்
சிரித்தபடி செல்லும் உன் சகஜங்களில்
எனக்கான காதலை காட்டிச்செல்கிறாய் நீ !!
இத்தனை நாளாய் சிரமமான பிராயத்தனங்களால்
மறைத்து ஒளித்து வைக்கப்பட்டிருந்த - என்
வெட்கம் வெளிக்கொணர்ந்த கோபத்தில்
என் இயலாமை மறைக்க
தடுமாற்றமில்லாதது போல் நடிப்பதாய் நினைத்து
பின்னாலிருந்து உன் சட்டை பிடித்திழுத்து
உனக்கான காதலை அவிழ்க்கிறேன் நான் !!
இருக்கும் இடைவெளியில்
உன் வெப்பம் ஈர்த்து
உயிர் வாழும் என் குளிர் மூச்சுக்காற்று !!
இரவை முடித்து வைத்து
இன்றை தொடக்கி வைத்து
நாள் முழுதுக்குமான பரிவர்த்தனைகளில்
நான் கொஞ்சங்கூட அறியாமல்
நிதர்சனமாய் நிறைந்திருக்கிறாய் நீ !!
எதிலும் உன்னை நினைவூட்டும்
நானறியா என் இயல்பு !!
என்னை பறைசாற்றும் அனைத்தும்
உன் சாயலிலேயே தோன்றி
பதுக்கி வைக்கப்படுகிறது எனக்குள் !!
இன்று வரையும் இறுதி வரையும்
என்னை இழுத்து பிடித்து
உன் பிடிக்குள் வைத்திருக்கிறது மாயக்காதல் !!
Thursday, October 20, 2011

ஒரு மொக்க கவித !!

நண்பர்களில்லாத கல்லூரிப் பேருந்து பயணமென்பது
நடு சாம மழை போல
இருட்டின் இன்னல்களுக்கு அப்பாற்பட்ட இன்பமது !!!
அப்படி ஓர் நாள்
தன்னந்தனியாய் பின்னிருக்கையில் அமர்ந்து
விலாசமில்லா   பேருந்துப்  பிரஜைகளை
ஆராய முற்பட்டதின் விளைவிது !!
                                    - ஓர் மொக்க கவிதை

ஒவ்வோர்  இருக்கையின் ஆக்ரமிப்புகள் பின்வருமாறு :
நண்பனோடு   அளவளாவிக்  கொண்டு
குழந்தைபோல்   சிரிக்கும்   ரெட் ஷர்ட் ஜுனியர்..
க்யூட் என  சொல்லும் மனசு,
எதிர் இருக்கையில் அவன் சைட் அடிக்கும் பெண்ணைப் பார்த்ததும்
சட்டென  சறுக்கும் ;)
தனியாய் சிரிக்கும் ஒருத்தி..
பேருந்து  கம்பியில்  தலைசாய்த்து  உறங்கும்  ஒருவன்..
கைபேசி குறுஞ்செய்தி உலகத்தின்
அனிச்சை   சந்தோஷத்தில்   லயித்து இருக்கும்  ஒருவனும்  ஒருத்தியும் ..
சுற்றுமுற்றும்  நடப்பது  அறியாமல் - காதில்
இசையோடு பயணிக்கும் ஒருவன் ..
மூன்று பேராய் கூடி
நான்காவதாய்  ஓர்  காதல்ஜோடியைப்  பற்றி
புரணிப் பேசும்  பக்கத்து  இருக்கை பெண்கள் ..
காலியாய் பல இடம் இருந்தும்
அரசல் புரசல் மற்றும் அலப்பறைகளோடு
இருவர்  இருக்கையில்
நால்வராய் பயணிக்கும்
இளமைப்  பட்டாள  இனிமைகள் ..
முன்பின்  இருக்கைகளில்  அமர்ந்து
கடலை போடும் சில மொக்கபீஸ்கள் ..
மறுநாள்   இண்டெர்னல் தேர்வுக்கான
ஆயத்தம் தொடங்கும் அதிமேதாவி ..
தப்பிக்க வழியின்றி
கண்டக்டரிடம்  கதை பேசிக் கொண்டிருக்கும் அப்பாவி ..
இத்தனைக்கும் நடுவில் - என்றும்
கூட பயணிக்கும் குரங்குக் கூட்டம் இன்றில்லாமல் போக
கல்லூரி பேருந்தின்
அன்றாட  பயணம் கூட அந்நியமாகி நிற்க
நெடுந்தூரம் தாண்டி வந்தபின்
புதிதாய் முளைத்த வேகத்தடையில்
பேருந்து துள்ளிக் குதிக்க
முன்னிருந்த  கம்பியில் முட்டி
தடுமாறி  நான் விழ
அனைவரும் திரும்பி பார்த்து சிரித்ததில்
அன்றைய  கவிதை  மற்றும் பேருந்தின்
கதாநாயகி ஆகிப் போனேன் நான் !!!

Saturday, July 09, 2011

காதலிக்கிறீங்களா, இத பாருங்க ;)

கடலை காதல் கல்யாணம்
என்றனைத்தும்
மோனையில் கூட கனவுகளோடு
முழுதாய் ஆமோதிக்க
விரக்தியை மட்டுமே
விடையாய் தரும்
வாழ்க்கையின் நிஜங்கள் ! ! !

நீ . . . நான். . .

கற்றைத் தீப்பிழம்பாய்
இருந்த என்னை
மழைமேகத் துளியாய்
மாற்றிய
ஒற்றைப் பார்வைக்குச்
சொந்தக்காரி நீ ! ! !

குச்சி மிட்டாய் ! ! !

கடும் மழையிலும்
கத்திரி வெயிலிலும்
நேரம் நான்கெனக் கூவும்
மணியோசைக்காக
பள்ளிகூட வாசலில்
காத்திருக்கும் துயரம் அறிந்தவன்
குச்சி மிட்டாய்காரன் ! ! !

குச்சி மிட்டாய் ! ! !

கடும் மழையிலும்
கத்திரி வெயிலிலும்
நேரம் நான்கெனக் கூவும்
மணியோசைக்காக
பள்ளிகூட வாசலில்
காத்திருக்கும் துயரம் அறிந்தவன்
குச்சி மிட்டாய்காரன் ! ! !

Friday, July 08, 2011

எரிகிறது வாழ்க்கை இங்கே!!!

முன்பின்னென
பொழுதுகள் கரைந்து கிழிந்துகொண்டிருக்க
மெல்லிய ஜவ்வாய்
மனப்படலங்கள் கிழிந்துகொண்டிருக்க
எலும்பை எரித்து உயிரை உருக்கி
குளிர்காயும் இவனை கொண்டுசெல்ல
எமன் வரும் நாளை
எதிர்நோக்கி எதிர்நோக்கி
காத்திருப்பதிலே
கழிகிறது என் நாட்கள். . .
படலங்கள் பிரியுமுன் வராவிடில்
மரணம் என்னை அணைத்திருக்கும். . .
எங்கனம் நோக்கினும்
வேண்டுவதோர் விடுதலையே ! ! !

மௌனங்கள் கூட ஒலிக்கும்

திரும்பி ஒருமுறை பார்க்க இயலாமல்
நீ நகர்ந்து செல்லும் நேரங்களில்
பிரிவின் ரணம் தாங்க மாட்டாமல்
உனதன்பை மனம் உணரும் தருணங்களில்
முதல் முத்த ஸ்பரிசங்களால்
நகராமல் நின்ற இரவுப்பொழுது
மனதை மழுங்கச் செய்துவிடுகிறது. . .
உயிரின் வீரியம் காற்றில் கரைந்து
தொடரும் முற்று புள்ளி நிலவுகளாய்
விழி நீர்துளியாய் தெறித்து நிற்க
காத்திருப்பின்  கனம்  கூடாமல்
பார்த்துகொள்ளும்படி பதறும் - என்
மௌனங்களை மெதுவாய் உணர்வாய் நீ ! ! !
காத்திருப்பின் கனம் கூடாமல்
பார்த்துகொள்ளும்படி பதறும் - என்
மௌனங்களை  மெதுவாய்  உணர்வாய் நீ ! ! !